Tuesday, April 20, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?

உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.

இணைய தளங்கள்:
www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி

குழுமங்கள்:

வலைப்பூக்கள்:

http://www.geocities.com/csd_one/UniConMagz.zip
http://www.geocities.com/csd_one/UWriterSetup.zip
http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip

ஓரளவு மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேட்ல்களுக்கு உதவியாக இருக்கும்.

ஆக்கம்: அதிரைக்காரன்
http://vettippechu.blogspot.com/2010/04/blog-post.html

2 comments:

முகவைத்தமிழன் said...

//தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!//

நிச்சயமாக இதை செய்ய வேண்டும். அதற்காக யாராவது இது குறித்து மாநாட்டு குழுவிடம் அறிவுரை வழங்கலாம் அல்லது எழுதி அனுப்பலாம்.

அதிரை தும்பி said...

இதையும்தான் வந்து பாருங்களேன்